தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளா இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 23ல் வாக்கு எண்ணிக்கை

2 mins read
9acc0b8f-1eba-4840-8177-0e7323b93e0c
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியிலிருந்து விலகினார்.

அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராதா கிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவைத் தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அவர்கள் இருவரும் அந்தத் தொகுதிகளின் எம்.பி.க்களாகப் பதவியேற்றனர். இதன் காரணமாக வயநாடு மக்களவைத் தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின.

வயநாடு மற்றும் செலக்கரா தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாலக்காடு சட்டமன்றத் தொகுதிக்கு புதன்கிழமை அன்று (நவம்பர் 20) இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.

இந்நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குககளை எண்ணும் பணி சனிக்கிழமை (நவம்பர் 23) தேதி நடைபெறுகிறது.

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 64.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தற்போது நடந்த இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி, அதேபோன்ற வெற்றியைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அத்துடன் செலக்கரா சட்டமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாலக்காடு சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சியும் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதும் நவம்பர் 23ஆம் தேதி தெரிந்துவிடும்.மூன்று தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்