தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரள இடைத்தேர்தல்: 3 வேட்பாளர்களையும் அறிவித்த காங்கிரஸ்

2 mins read
d28737c1-b331-4bdc-ad2f-1c2d73d0254e
கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி களும், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது தாய் சோனியா காந்தியின் தொகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில் அங்கும் வெற்றிபெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒன்றை மட்டுமே தேர்தெடுக்க வேண்டும் என்ற சூழல் எழுந்ததால், வட மாநிலங்களில் காங்கிரசை வலுப்படுத்தும்  நோக்கத்தில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலில் கேரளாவில் 2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில், வடகரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்றத் தொகுதிகளும் காலியான தாக அறிவிக்கப்பட்டன.

வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்றத் தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளும் 4 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்ததால், அந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவியது. 

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி, பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அக்டோபர் 18ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. அரசியல் கட்சியினரும் இடைத்தேர்தலுக்குத் தயாராக தொடங்கி விட்டனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. 

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை இரவு வெளியானது. அவருக்கு கடும் போட்டியாக இருக்கும் வகையில் வேட்பாளரை களமிறக்க பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்