திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தம்மை நேரில் சந்தித்து அறிக்கை அளிக்கும்படித் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை தலைவருக்கும் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மூத்த அதிகாரிகள் ஆளுநரைச் சந்திக்கச் செல்லமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவுரையைத் தொடர்ந்து, அக்டோபர் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள சந்திப்பை அரசின் மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 150 கிலோ கடத்தல் தங்கமும் ரூ.123 கோடி மதிப்புள்ள மோசடிப் பணமும் மாநிலக் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணம் தேச விரோதச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கேரளாவுக்குள் நுழைவதாக அண்மைய நேர்காணலில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வருக்குச் சென்ற வாரம் ஆளுநர் எழுதிய கடிதத்தில், கடந்த பல ஆண்டுகளாக தேச விரோதச் செயல்களுக்குப் பணம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துத் தம்மிடம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கடிதத்துக்கு முதல்வர் பதிலளிக்காததால், தங்கக் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வரின் பேச்சு தொடர்பான விளக்கத்தையும் நேரில் சந்தித்து அளிக்கும்படித் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், காவல்துறைத் தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹேப் ஆகியோருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
ஆனால், ஆளுநரின் நேரடித் தலையீட்டை மாநில அரசு விதிகளுக்கு முரணானது என்று கருதுவதால் அதிகாரிகள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே கேரள ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், முதல்வரின் அறிவுறுத்தல் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.