திருவனந்தபுரம்: வடகேரளாவில் கோயில் அருகே மிருக பலி நடத்தப்பட்டதாக கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் கூறிய குற்றச்சாட்டை கேரள ஆலய வாரிய அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் மீண்டும் மறுத்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் கேரளாவில் நிகழ்வதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், திரு சிவகுமாரின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில் கேரளாவின் உயர் கல்வி மற்றும் சமூக நீதிக்கான அமைச்சர் ஆர் பிந்து, திரு சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று சாடியுள்ளார்.
திரு சிவகுமார் கடந்த வியாழக்கிழமை, விலங்குகளைப் பலியிடுவது தொடர்பான “சத்ரு பைரவி யாகம்” என்ற ஒரு சடங்கு கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்த்தப்பட்டது, அது, சித்தராமையா மற்றும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்று கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அம்மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம் தாலிபரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வரர் கோயில் அருகே விலங்கு பலி பூசை நிகழ்த்தப்பட்டதாக திரு சிவகுமார் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக கேரள ஆலய வாரிய அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
“திரு சிவகுமாரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, மலபார் ஆலய வாரியத்தையும் தொடர்பு கொண்டோம். எங்களுக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கை, கோயிலுக்கு உள்ளேயோ அல்லது அதன் அருகிலோ அவர் கூறியதைப் போல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறது. ஆலய வாரியமும் அதை உறுதி செய்துள்ளது,” என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். திரு சிவகுமார் ஏன் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது கண்டிப்பாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்றார் அவர்.
கர்நாடக துணை முதல்வர் கூறியபடி கேரளாவில் வேறு எங்கும் நடந்ததா என்பது குறித்து அரசு விசாரித்து வருவதாகவும் திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.
1968ஆம் ஆண்டு முதல் விலங்குகளைப் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், கேரளாவில் அவ்வாறான சடங்குகள் நடப்பது சாத்தியமில்லை என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
திரு சிவகுமாரின் குற்றச்சாட்டுகளைக் கோயிலின் நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது. மேலும் சிவக்குமாரின் குற்றச்சாட்டுகள் 100 விழுக்காடு பொய்யானது என்றும் கூறியுள்ளது.
திரு சிவக்குமார் கூறியதுபோல் இங்கு விலங்குகள் பலியிடும் செயல்கள் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று காவல்துறை சிறப்புப் பிரிவு அதிகாரிகள், அம்மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.