திருவனந்தபுரம்: புத்தகப்பைச் சுமையைக் குறைக்கவும் பின்வரிசை மாணவர்கள் என்ற நிலையை நீக்கவும் இந்தியாவின் கேரள மாநில அரசின் பாடத்திட்ட வழிகாட்டுக் குழு முன்மொழிந்த வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் உடல், மனநலத்தை உறுதிசெய்யும் நோக்குடன் புத்தகப்பையின் சுமையைக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, வகுப்பறைகளை ஜனநாயகமயப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பின்வரிசை மாணவர்கள் இல்லாத சூழலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (ஜனவரி 8) வெளியிடப்பட்ட அதிகாரத்துவ அறிக்கை குறிப்பிட்டது.
கல்வித்துறையில் முன்மொழியப்பட்டுள்ள இவ்விரு முக்கியச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்கள் யோசனைகளையும் கருத்துகளையும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
பொதுமக்களின் கருத்தை ஆராய்ந்தபின் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து இவ்விரு மாற்றங்களையும் நடைமுறைப்படுத்த கேரளப் பொதுக்கல்வித் துறை இலக்கு கொண்டுள்ளது.
வழிகாட்டுக் குழு பரிந்துரைகளின்படி, 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள வகுப்பறைகளில் மாணவர்கள் ‘U’ வடிவத்தில் அமரவைக்கப்பட வேண்டும்.
அதுபோல, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு பாடங்களே பாட அட்டவணையில் இடம்பெற வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிகளிலேயே புத்தகங்களை வைத்துவிட்டுச் செல்ல பாதுகாப்புப் பெட்டக வசதி, பல பாடங்களுக்கும் ஒரே குறிப்பேடு, புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மின்னிலக்க நூல் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவை குழுவின் மற்றப் பரிந்துரைகளில் சில.
பள்ளிகளைக் குழந்தைகளுக்கு உகந்ததாக்கவும் ஜனநாயகமயப்படுத்தவும் இந்தச் சீர்திருத்தங்கள் உதவும் என்று அமைச்சர் சிவன்குட்டி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கடந்த 2024ஆம் ஆண்டு அவர் அறிவித்திருந்தார்.

