தீவிர வறுமையில் இருந்து கேரளா விடுபட்டுவிட்டது: பினராயி விஜயன் பெருமிதம்

1 mins read
803e5315-7ed2-46d0-858d-68cea2148809
முதல்வர் பினராயி விஜயன். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த 2021ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

“இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து ஏறக்குறைய 64,000 குடும்பங்களைச் சேர்ந்த 103,000 பேர் மிகவும் ஏழ்மையானவர்களாக வகைப்படுத்தப்பட்டனர்.

“பின்னர் உணவு, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டன,” என்றார் பினராயி விஜயன்.

இதையடுத்து, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள்கூட இல்லாமல் தவித்த ஏறக்குறைய 21,000 பேருக்கு அவை வழங்கப்பட்டதாகவும் 20,000 குடும்பங்களுக்கு வழக்கமான உணவு விநியோகத் திட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் திரு பினராயி கூறினார்.

மேலும், 4,677 குடும்பங்களுக்கு வீடுகள், 2,713 குடும்பங்களுக்கு வீடுகளுடன் கூடிய நிலங்கள், 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்துக்காக கேரள அரசு ரூ. 1,000 கோடி செலவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்