கல்லூரிகளில் அரசியல் தலையீட்டைத் தடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்லூரிகளில் அரசியல் தலையீட்டைத் தடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

படம்: லைவ்லா

07 Feb 2026 - 6:45 pm

1 mins read

கொச்சி: கல்லூரி வளாகங்களில் அரசியல் தலையீட்டைத் தடுப்பதற்கு விரிவான விதிமுறைகளை வகுக்கும்படி கேரள மாநிலத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக் குழுக்களுக்கும் அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வகுத்த ஒழுங்குவிதிகளை முன்மாதிரியாகக் கொண்டு, புதிய விதிகளை வகுக்குமாறு அது பரிந்துரைத்துள்ளது.

கல்லூரி வளாகங்களில் அரசியலை ஒழுங்குபடுத்துவதற்குக் கடுமையான நடவடிக்கை தேவை எனக் கோரி, செங்கன்னூரைச் சேர்ந்த எல்.எஸ். அஜோய் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதனை விசாரித்த தலைமை நீதிபதி சௌமென் சென், நீதிபதி வி.எம். ஷியாம் குமார் அடங்கிய அமர்வு, இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

எர்ணாகுளம் மகாராஜா கல்லூரிக்குள் இடம்பெற்ற தாக்குதலில் அபிமன்யு என்ற மாணவர் கொல்லப்பட்டார். அச்சம்பவம், மாணவர்களுக்கு இடையிலான அரசியல் வன்முறை குறித்தும் உயர்கல்வி நிலையங்களில் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்பியது.

அத்தகைய போக்கிற்கு முடிவுகட்டும் நோக்கில் திரு அஜோய் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

வகுக்கப்படும் புதிய விதித்தொகுப்பை உயர் நீதிமன்றத்திலும் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடமும் தாக்கல் செய்யும்படி பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளைத் திறம்பட நடைமுறைப்படுத்த ஏதேனும் சட்டத் திருத்தம் தேவைப்பட்டால் அதுகுறித்து மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் வரும் மார்ச் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகேரளாஅரசியல்கல்லூரிபல்கலைக்கழகம்வன்முறைமாணவர்