திருவனந்தபுரம்: மாணவர்களின் மொழியாற்றலையும் தொடர்புத்திறனையும் வளர்க்கும் நோக்குடன் பள்ளிகளில் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வியை உறுதிசெய்யும் விரிவான கல்விப் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, தாய்மொழிக் கல்வியை மேம்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இணையத்திலும் தாய்மொழியைக் கற்க ஏதுவாக, மாணவர்கள் கணினியில் மலையாள மொழியைத் தட்டச்சு செய்வது எப்படி என்பதும் கற்றுக்கொடுக்கப்படும்.
2025ஆம் ஆண்டு கல்வித் தர ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கருப்பொருளை ஒட்டி, ஒவ்வொரு பள்ளியும் தனக்கான பெருந்திட்டத்தையும் கல்விசார்ந்த பல்வேறு திட்டங்களையும் வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசித்தல், எழுதுதல், ஒப்புவித்தல் போன்ற அடிப்படைத் திறன்களில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மதிப்பிடப்படுவர்.
மாணவர்களிடம் பன்மொழித்திறனை வளர்க்கும் விதமாக மலையாளம் மட்டுமின்றி, ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மாணவர்கள் நல்ல தேர்ச்சிபெற வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
செய்தித்தாள் வாசிப்பு நடவடிக்கையில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் கூடுதலாகப் பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மாநிலக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசிப்புப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் செய்தித்தாள் வாசித்து அதுகுறித்து வகுப்பறையில் விவாதிப்பது, மாணவர்களின் உச்சரிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் சத்தமாக வாசிக்கச் சொல்வது, பள்ளி நூலகங்களுக்கு வரும் சஞ்சிகைகளைப் பயன்படுத்தச் சொல்வது, வாரத்திற்குக் குறைந்தது ஒரு நூலையேனும் படிக்கும்படி ஊக்குவிப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.