தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவுக்கு ஒரு கோவில்! ஆடவரின் அருமுயற்சி!

2 mins read
‘அறிவே பெருங்கடவுள்’ என வலியுறுத்துகிறார் ஐந்து முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர்
cb26b6c6-46a1-4df0-aff5-3526a2ec8296
இந்த வழிபாட்டு மையத்தில் புத்தகத்திற்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

கண்ணூர்: அறிவுக்கு ஒரு வழிபாட்டு மையத்தை அமைத்து, பலரையும் ஈர்த்து வருகிறார் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற ஆடவர்.

கண்ணூரின் செருபுழாவில் கடந்த 2021 அக்டோபரில் அவர் அம்மையத்தை நிறுவினார்.

அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகவே நூல்கள் குறித்த கலந்துரையாடல்களும் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதும் இடம்பெற்று வருகின்றன.

‘அறிவே பெருங்கடவுள்’ என்பதைக் குறிப்பிடும் வகையில், அந்த வழிபாட்டு மையத்தில் புத்தகத்திற்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தன்னடக்கத்துடனும் பரந்த கண்ணோட்டத்துடனும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அது வலியுறுத்துகிறது.

அம்மையத்தின் நுழைவாயிலை ஒட்டி 5,000க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் அப்பகுதியைக் கடந்த பின்னரே புத்தகச் சிலையை வழிபட முடியும். புத்தகச் சிலையருகே புத்தருக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அந்த வழிபாட்டு மையத்தில் 20 பேர்வரை தங்கலாம். நிகழ்ச்சிகளை நடத்த ஒரு திறந்தவெளி அரங்கம் அங்குள்ளது. சிறு கூடமும் உணவருந்தும் கூடமும் அங்குள்ளது. கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த பலரும் அம்மையத்திற்கு வந்து செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் அந்த வழிபாட்டு மையம் திறந்திருக்கும்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அங்கு வருடாந்தர விழா நடத்தப்படுகிறது. மையத்தில் நிகழ்ச்சிகளை நடத்த சாபு மலியேக்கல் எனும் உற்ற நண்பர் நாராயணனுக்கு உதவி வருகிறார். அம்மையத்தை உருவாக்க இதுவரை ரூ.40 லட்சத்திற்குமேல் செலவுசெய்துள்ளனர்.

செருபுழாவில் கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்திவரும் நாராயணன் ஐந்து முதுநிலைப் பட்டங்களைப் பெற்றவர். அவருக்கு ஷைலா என்ற மனைவியும் நிம்னா, நீரஜ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். இதுவரை 26 நூல்களை எழுதியுள்ள அவர், ‘சபர்யா’ என்ற கலை, கலாசார அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்

குறிப்புச் சொற்கள்