சொந்த செலவில் ஐந்து குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த கொத்தனார்

2 mins read
6a47752e-af1a-43de-a815-67c6602aa72d
தம் மனைவி ஷீனாவுடன் திரு சுந்தரன். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர்.

கேரள மாநிலம், இரிட்டியைச் சேர்ந்தவர் திரு சுந்தரன். இவருக்கு ஷீனா என்ற மனைவியும் சோனா, சயந்தா என இரு மகள்களும் உள்ளனர்.

பெங்களூரில் உயர்கல்வியை முடித்த இவரது மகள்களில் ஒருவர், ஒருசில ஆண்டுகள் வேலை பார்த்த பின்னரே திருமணம் செய்துகொள்வேன் எனக் கூறிவிட்டார்.

மேலும், தனது திருமணத்திற்காகத் தன் தந்தை சேர்த்து வைத்திருந்த பணத்தை நற்செயலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளவும் அவர் அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, ஐந்து வீடுகளைக் கட்டிய திரு சுந்தரன், அவற்றை இம்மாதம் 29ஆம் தேதி திருவோண நாளன்று ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளார்.

அவ்வீடுகள் ஒவ்வொன்றும் 750 சதுர அடி பரப்பளவு கொண்டவை. ஒவ்வொரு வீட்டிலும் இரு படுக்கையறைகள், சமையலறை, திண்ணை, முற்றம், குளியலறை உண்டு. ஒரே சுற்றுவளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள அவ்வீடுகளின் பயன்பாட்டிற்காக ஒரு கிணறும் தோண்டப்பட்டுள்ளது.

இதற்கு மொத்தம் ஒரு கோடி ரூபாய் செலவானதாகக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை திரு சுந்தரன் குடும்பத்தினர் அனைவரும் மேற்பார்வை செய்தனர்.

இதுபோல், பத்தாண்டுகளுக்கு முன்னரும் திரு சுந்தரன் தன் சொந்த செலவில் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருந்தார்.

இம்முறை, இலவச வீடுகளைப்பெற மொத்தம் 165 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை அலசி ஆராய்ந்து, உதவி தேவைப்படும் ஐந்து குடும்பங்கள் தேர்வுசெய்யப்பட்டன.

கட்டில்கள், படுக்கைகள் உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன், புதுவீட்டில் குடியேறும் குடும்பங்களின் உடனடிச் செலவுகளுக்காக 20,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

அக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள முதல் வீடு உடற்குறையுள்ள ஒருவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கட்டுமானத் தொழிலில் வெற்றிகரமானவராக வலம் வருவதால் இந்த மனிதநேயப் பணிக்கு திரு சுந்தரனால் போதுமான நிதி திரட்ட முடிந்தது.

குறிப்புச் சொற்கள்