கொச்சி: கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடிகை திவ்யா உண்ணி தலைமையில் 12,000 நடனமணிகள் கலந்துகொண்ட நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் கேரள கலாச்சார துறை அமைச்சர் ஷஜி செறியான், திருக்காக்கரை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ உமா தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 15 அடி உயரமுள்ள மேடையில் இருந்து மற்றொரு மேடைக்குச் செல்லும் போது உமா தாமஸ் கீழே தவறி விழுந்தார்.
அதில் பலத்த காயமடைந்த உமா, ரத்த வெள்ளத்தில் அவசர உதவி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உமா மயக்க நிலையில் உள்ளதாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு தான் சிகிச்சையின் நிலை குறித்து கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேடைக்குச் செல்லும் பகுதியில் சரியான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் உயரத்தில் இருந்து கீழே விழுவதை தடுக்க தடுப்பு எதுவும் அமைக்கப்படாமல் இருந்ததையும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.