திருவனந்தபுரம்: கடத்தல் வழக்கில் சாட்சிகளைக் கலைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கேரள எம்எல்ஏ ஆண்டனி ராஜு 36, ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு சால்வடோர் செர்வெல்லி என்பவர் திருவனந்தபுரம் வந்தார். அப்போது 61.5 கிராம் தடை செய்யப்பட்ட பொருள்களை அவர் தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செர்வெல்லி சார்பாக ஆண்டனி ராஜு முன்னிலையானார். அவர் அப்போதுதான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இருந்தார். இந்த வழக்கில் செர்வெல்லிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், எதிர்பாராத திருப்பமாக செர்வெல்லி கேரள உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
உள்ளாடையில் பொருள்களை மறைத்துக் கடத்தி வந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் அந்த உள்ளாடை செர்வெல்லியின் உடல் அளவுக்கு ஏற்றதாக இல்லை என்று விடுதலைக்கான காரணத்தைக் கூறியது நீதிமன்றம்.
இதையடுத்து, செர்வெல்லி ஆஸ்திரேலியா திரும்பிவிட்டார். எனினும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, முயற்சியைக் கைவிடவில்லை.
வழக்கறிஞர் ஆண்டனி ராஜு மீதும், நீதிமன்ற ஊழியர் ஒருவர் மீதும் 1994ஆம் ஆண்டு குற்றவியல் வழக்கு தொடுத்தார். குற்றவியல்படி சதி, ஆதாரங்களைக் காணாமல் போகச்செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களைச் செவிமெடுத்த நீதிமன்றம், ஆண்டனி ராஜு குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, நடப்பு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் கேரள போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி ராஜுவுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

