பேங்காக்கிலிருந்து ரூ.12 கோடி கஞ்சா கடத்திய கேரள மாடல் அழகி கைது

பேங்காக்கிலிருந்து ரூ.12 கோடி கஞ்சா கடத்திய கேரள மாடல் அழகி கைது

2 mins read
845ee06f-56c6-4fae-b0d2-bad911b56c04
மும்பை விமான நிலையத்தில் 11 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் பிடிபட்ட ஹர்ஷா சன்னி. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
Google News Preferred Icon

மும்பை: பேங்காக்கிலிருந்து ஏறக்குறைய 11.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.8 கிலோவுக்கும் அதிகமான உயர்தரக் கஞ்சாவை இந்தியாவுக்குக் கடத்தி வந்த 28 வயது கேரள மாடல் அழகியை மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதான பெண் தனியார் வங்கி ஊழியர் என்பதும் கடந்த ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் இரண்டாமிடத்தில் வென்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணையில், அப்பெண் ஹர்ஷா சன்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஜூன் 10-11 நள்ளிரவில் பேங்காக்கிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா விமானம் (TG 351) மூலம் பேங்காக்கிலிருந்து மும்பைக்கு வந்த ஹர்ஷா சன்னியின் நடத்தையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட, உடனே அவரைத் தடுத்து நிறுத்தி சோதித்தனர்.

அவரது பையைச் சோதித்தபோது, அதற்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பச்சை நிறத்திலான பொருள் இருந்தது.

உடனடியாக ‘என்டிபிஎஸ்’ கருவி மூலம் நடத்தப்பட்ட ரசாயனச் சோதனையில், அது அனைத்துலகச் சந்தையில் அதிக தேவையுள்ள வீரியமிக்க ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது உறுதியானது.

பறிமுதல் செய்யப்பட்ட 11.8 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருளின் மதிப்பு ஏறக்குறைய ரூ.11.82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

“கைதான ஹர்ஷா சன்னி தான் ஒரு நிரபராதி என்று வாதிடுகிறார். தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது ஓர் ஆடவர் தன்னிடம் நட்பாகப் பழகி, இந்தப் பையை இந்தியாவில் கொண்டு வந்து சேர்க்குமாறு கொடுத்ததாகக் கூறினார்,” என்று சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு, மும்பை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தியா-நேப்பாள எல்லையில் தமிழ்நாட்டு வாலிபர் கைது

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், இந்தியா-நேப்பாள எல்லையான மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், அனைத்துலகச் சந்தையில் ரூ.1 கோடி மதிப்பில் விற்பனையாகும் 2.30 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியத் தகவலின் பேரில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது இத்ரிஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டார்.

நேப்பாள எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நடந்து வந்தபோது, அவரது பையைச் சோதித்ததில் இந்தப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்