திருச்சூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் என்ற திருடன், காவல்துறையின் பிடியிலிருந்து மீண்டும் தப்பியோடினான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலமுருகன், இம்முறை கேரளாவின் விய்யூரிலிருந்து தப்பினான்.
வெள்ளிக்கிழமை (மே 17) இரவு 7 மணியளவில் பாலமுருகனை நீதிமன்றத்திலிருந்து விய்யூர் சிறைச்சாலைக்குத் தமிழகக் காவல்துறை வேனில் கொண்டுசென்றபோது அவன் தப்பியோடினான்.
சிறைச்சாலை வளாகத்தை அடைந்ததும் காவலர்கள் அவனது கைவிலங்கை அகற்றினர். உடனே அவர்களைத் தள்ளிவிட்டு, வேனிலிருந்து குதித்து அவன் தப்பியதாகக் கூறப்பட்டது.
பாலமுருகன்மீது கேரளாவிலும் தமிழகத்திலும் கொலை உள்ளிட்ட 53 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆயினும், அவன் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்புவதும் தொடர்கதையாகி வருகிறது.
முன்னதாக, சிறையில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு அவன் தப்பினான். கடந்த 2023 செப்டம்பரில் மரயூரில் ஒரு வீட்டில் திருடியபோது அவன் காவல்துறையினரிடம் சிக்கினான்.
இந்நிலையில், மீண்டும் தப்பிய பாலமுருகனைத் தேடும் வேட்டையில் திருச்சூர் நகரக் காவல்துறையினரும் கைகோத்துள்ளனர்.

