தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரள தாதியின் மரண தண்டனை: இறுதி நேரத்தில் நிறுத்தி வைத்தது ஏமன்

2 mins read
de82f460-76e2-4f32-914d-8c146569d7a8
மரணக் கயிற்றின் பிடியில் தத்தளிக்கும் தாதி நிமிஷா பிரியா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏமனில் கேரள தாதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அவரது குடும்பத்துக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா, 36. இவர், ஏமன் நாட்டில் தாதியாகப் பணிபுரிந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் தாதியாக வேலை செய்த அவர், ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து தலைநகர் சனாவில் சொந்தமாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

நிமிஷாவின் வருமானம், மருந்தகத்தின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு மஹ்தி தொல்லை தந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார்.

அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2023ல், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதை எதிர்த்து, நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நிமிஷாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஏமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட மஹ்தியின் குடும்பத்தாருடன், இந்திய சமயத் தலைவர் அபுபக்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்திய அதிகாரிகள் ஏமனில் உள்ளூர் சிறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

வழக்கின் தொடக்கத்தில் இருந்தே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி, அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இந்த சூழலில் தற்போது மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏமனில் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால் மரண தண்டனையில் இருந்து நிமிஷா காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்