தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளா: அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்புத் தணிக்கைக்கு உத்தரவு

2 mins read
52c2186d-3699-4d66-aaff-0113648c9584
பள்ளியின் கூரையில் சிக்கிய செருப்பை எடுக்க முயன்றபோது தவறுதலாக மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து மிதுன் என்ற இச்சிறுவன் மாண்டுபோனான். - படங்கள்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: பள்ளிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தக் கடுமையான நெறிமுறைகளை இந்தியாவின் கேரள மாநிலக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி அறிவித்துள்ளார்.

கொல்லத்திலுள்ள தேவலக்கரா ஆண்கள் பள்ளியில் மிதுன், 13, என்ற எட்டாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை அடுத்து, மாநில அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிதுனின் உயிரிழப்பை ‘மன்னிக்க முடியாத கவனக்குறைவு’ எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர் ‘கேரளத்தின் மகன்’ என்றும் அவரைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மாநிலமும் தவறிவிட்டது என்றும் சொன்னார்.

“மிதுனின் மறைவு தனிப்பட்டதொரு சோக நிகழ்வன்று. அது அனைவர்க்கும் ஏற்பட்ட காயம்,” என்று செய்தியாளர்களிடம் பேசியபோது திரு சிவன்குட்டி கூறினார்.

பள்ளியின் உள்கட்டமைப்புப் பராமரிப்பில் காணப்பட்ட கடுமையான குறைபாடுகளும் நிர்வாகத்தின் கவனக்குறைவும் அரசின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பள்ளி நிர்வாகி அளித்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை எனக் கூறப்பட்டது.

அவரைப் பதவியிலிருந்து நீக்கியதோடு, பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டது. தற்போது அப்பள்ளி கொல்லம் மாவட்டக் கல்வி அலுவலரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சர் சிவன்குட்டி அறிவித்துள்ளார். மாநிலம் முழுதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாதுகாப்புத் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு குறித்தும் ஏதேனும் ஆபத்து உள்ளதா என்பது குறித்தும் ஆராய, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.

அத்துடன், பள்ளிகளிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்துக் கல்வித் துறைக்குப் பொதுமக்கள் நேரடியாகப் புகாரளிக்க ஏதுவாக இணையத்தளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும்.

இம்மாதம் 17ஆம் தேதி காலை 8.30 மணியளவில் சக மாணவர்களுடன் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மிதுன் உயிரிழக்க நேரிட்டது. கூரையில் சிக்கிக்கொண்ட தனது செருப்பை எடுக்க முயன்றபோது, தொங்கிய நிலையில் இருந்த மின்கம்பியை அவர் தவறுதலாகத் தொட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்