தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்நாட்டிற்கு ரூ.2 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் மலையாளிகள்

2 mins read
0d1cd57b-efe8-472f-9f08-2ea8f24dfae8
வழக்கமாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பிவைக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு கேரளத்திற்குச் செல்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் வசிக்கும் மலையாளிகள் தாய்மாநிலமான கேரளத்திற்குச் சாதனை அளவாக ஒரே ஆண்டில் ரூ.2 லட்சம் கோடிக்குமேல் (S$30.2 பில்லியன்) அனுப்பியுள்ளனர்.

அதே நேரத்தில், கேரளத்திலுள்ள வங்கிகள் வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்புத்தொகை ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இது, கேரளத்தின் பொருளியலுக்கு மிகுந்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, குடும்பங்கள் செலவிடும் தொகை கூடியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். அத்துடன், வெளிநாடுகளுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் அவர்கள் அங்கே அதிக வருமானம் ஈட்டுவதும் மற்ற காரணங்கள்.

வளைகுடா நாடுகளில் இருக்கும் மலையாளிகளே கேரளத்திற்குப் பணம் அனுப்புவதில் முதலிடத்தில் உள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகையின் மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் 19.7 விழுக்காடு கேரளத்திற்குச் செல்வதாக இந்திய மத்திய வங்கி (ஆர்பிஐ) அறிக்கை தெரிவிக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓராண்டில் 10.14 லட்சம் கோடி அனுப்பிவைத்த நிலையில், அதில் மலையாளிகளின் பங்கு கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி. அதாவது, மலையாளிகள் மாதத்திற்குச் சராசரியாக ரூ.16,665 கோடியைக் கேரளத்திற்கு அனுப்பிவைக்கின்றனர்.

பத்தாண்டுகளுக்குமுன், அதாவது 2014ஆம் ஆண்டில் வெளிநாடுவாழ் மலையாளிகள் கேரளத்திற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக, அதாவது மாதத்திற்கு ரூ.8,333 கோடியாக இருந்தது.

வழக்கமாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பிவைக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு கேரளத்திற்குச் செல்கிறது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் அது 10.4 விழுக்காடாகக் குறைந்தாலும் அதன்பின் மீண்டும் பழைய நிலை திரும்பியது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பிவைக்கும் தொகையில் 10.4 விழுக்காடு தமிழ்நாட்டிற்குச் செல்கிறது. ஒட்டுமொத்தத்தில், கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே 50.6% பணத்தைப் பெறுகின்றன.

இதனிடையே, 2025 மார்ச் நிலவரப்படி கேரளத்தில் இருக்கும் வங்கிகளில் வெளிநாடுவாழ் மலையாளிகளின் வைப்புத்தொகை ரூ.293,622 கோடியாக உயர்ந்திருப்பதாக மாநில வங்கியாளர்கள் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்