உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய இளம் பெண் கைது

2 mins read
717970c7-5c99-4a6d-887f-2ee4167cfce6
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய ஷாலா, பின்னர் காவல்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். படம்: இந்திய ஊடகம் -

தங்கக் கடத்தல் நடவடிக்கைகளுக்காக இளம் பெண்களை தங்க வியாபாரிகள் ஈடுபடுத்துவதன் அடையாளமாக, தமது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய 19 வயதுப் பெண்ணை இந்தியாவின் கேரள மாநிலத்தில் காவல்துறையினர் திங்கள்கிழமை (டிசம்பர் 26) கைது செய்தனர்.

மலப்புரம் மாவட்ட காவல்துறை தலைவர் எஸ்.சுஜித் தாஸ் என்பவரிடமிருந்து ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், காசர்கோட்டைச் சேர்ந்த ஷாலா என்பவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

துபாயிலிருந்து புறப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு ஷாலா வந்திறங்கினார்.

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தைவிட்டு அவர் வெளியேறினார்.

காவல்துறையினர் ஷாலாவிடம் மணிக்கணக்கில் விசாரணை செய்தபோதும் அவர் உண்மையைக் கக்கவில்லை. தாம் தங்கம் கடத்தவில்லை என்பதையே அவர் திரும்ப திரும்பச் சொன்னார்.

அவரது பயணப்பெட்டியை அதிகாரிகள் சோதித்தபோது அதில் தங்கம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. ஆனால், அந்தப் பெண் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, பசைவடிவிலான மூன்று பாக்கெட்டுகள் தங்கம் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அந்த மூன்று பாக்கெட்டுகளின் எடை 1.8 கிலோகிராம்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக தாம் துபாய் செல்வதாக அந்தப் பெண் தம்முடைய பெற்றோரிடம் கூறியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்கம் கடத்தி வருவதற்கு ரூ.60,000 கட்டணம் பெற அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தங்கக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றவர்களை அடையாளம் காண அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும். கூடுதல் விசாரணைக்காக மேல்விவரம் உள்ள அறிக்கை சுங்கத்துறையிடம் சமர்ப்பிக்கப்படும்.