கேரளம் சென்று காணொளி வலைப்பதிவரை நையப்புடைத்த தமிழகப் பெண்கள்

கேரளம் சென்று காணொளி வலைப்பதிவரை நையப்புடைத்த தமிழகப் பெண்கள்

1 mins read
9220a536-a0c1-401e-a227-052a4ccf2847
சாலை நடுவே கைகளும் கால்களும் கட்டிப்போடப்பட்ட நிலையில் பெண்களிடம் அடி வாங்கிய முகம்மதலி ஜின்னா. - படம்: கேரள ஊடகம்

அட்டப்பாடி: அண்டை மாநிலமான கேரளத்திற்குச் சென்று, காணொளி வலைப்பதிவர் (vlogger) ஒருவரைத் தமிழகப் பெண்கள் கட்டிப்போட்டு நையப்புடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முகம்மதலி ஜின்னா. அவர் பல பெண்களின் படங்களை ஆபாசமாக உருமாற்றம் (morphing) செய்து, அதனை இணையத்தில் வெளியிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் அவர் பல பெண்களை அருவருக்கத்தக்க வகையில் உருமாற்றம் செய்து பரப்பி வந்தார் என்பது ஜின்னா மீதான குற்றச்சாட்டு. அத்துடன், தங்களின் சமூக ஊடகப் பதிவுகள், காணொளிகளுக்குக் கீழே தகாத சொற்களால் அவர் கருத்து பதிவிட்டிருந்ததாகவும் அப்பெண்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் பலர் அவரைத் தேடி கேரளத்தின் அகலிப் பகுதிக்குச் சென்றனர். தமது கடையிலிருந்த ஜின்னாவைப் பிடித்த அப்பெண்கள், அவரது கையையும் காலையும் கட்டிப்போட்டு, அடித்து உதைக்கத் தொடங்கினர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பெண்களிடமிருந்து ஜின்னாவை மீட்டனர்.

பின்னர், ஆடையற்ற நிலையில் பெண்கள் இருக்கும் காணொளியைப் பரப்பியதற்காக ஜின்னாமீதும் அவரை அடித்த பெண்கள்மீதும் காவல்துறை வழக்கு பதிந்தது.

குறிப்புச் சொற்கள்