கோழிக்கோடு: மின்கம்பத்தில் மோதி அவசர மருத்துவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த பெண் நோயாளி தீயில் கருகி உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம், செவ்வாய்க்கிழமை (மே 14) அதிகாலை இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது.
கோழிக்கோடு மாவட்டம், நடப்புரத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா, 57. அவர் உள்ளியேரியிலுள்ள மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள எம்ஐஎம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது இவ்விபத்து நிகழ்ந்து மாண்டுபோனார்.
விடிகாலை 3.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இதில், சுலோச்சனாவின் கணவர் சந்திரன், அண்டை வீட்டுக்காரர் பிரதீப், ஒரு மருத்துவர், இரு தாதியர், மருத்துவ வாகன ஓட்டுநர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தின்மீது மோதி, பின்னர் ஒரு கட்டடத்தின்மீது மோதியதாக ‘மனோரமா’ செய்தி தெரிவித்தது. அப்போது, வாகனத்திலிருந்த எரிபொருள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வாகனம் முற்றிலும் தீக்கிரையானது. விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியில் கனமழை பெய்ததாகவும் கூறப்பட்டது.

