மணமேடை காணவிருந்த கேரள இளையர் ரஷ்யப் படைத் தாக்குதலில் மரணம்

மணமேடை காணவிருந்த கேரள இளையர் ரஷ்யப் படைத் தாக்குதலில் மரணம்

2 mins read
695aed60-94e7-462e-9731-5680d987f58e
உயிரிழந்த கேரள இளையர் அகில் ஜோயன். - படம்: ஃபர்ஸ்ட் போஸ்ட்

புதுடெல்லி: உக்ரேனில் ரஷ்யப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வணிகக் கப்பல் ஊழியர்கள் நால்வரில் கேரள ஆடவரைப் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

அகில் ஜோயன் எனப்படும் அந்த 26 வயது ஊழியர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள வெள்ளரிக்குண்டுப் பகுதியைச் சேர்ந்தவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரேனில் ரஷ்யப் படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த நால்வரில் அகிலும் ஒருவர்.

உயிரிழந்த மற்ற மூவர் குர்ப்ரீத் சிங் பட், ஜெகன் சிங், அபிஷேக் நிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அகில் உயிரிழந்துவிட்டதாக அவர் வேலை செய்யும் கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் கிடைத்ததென பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளரிக்குண்டு பஞ்சாயத்து உறுப்பினர் ஷோபி ஜோசப் கூறினார்.

அகிலுக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு, இன்னும் இரண்டு மாதங்களில் மணமேடை காணவிருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கப்பல் ஊழியராக 19 வயதில் வேலையில் சேர்ந்த அகில் மூன்று மாதங்களுக்கு முன்னர் தமது நிச்சயதார்த்த சடங்கிற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.

உக்ரேனின் கடல்துறை துறைமுக ஆணையத்தின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) கருங்கடலில் தானியங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் காயமடைந்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அந்த வணிகக் கப்பல் ‘எம்வி கோல்டன் லியோ’ என்று அடையாளம் காணப்பட்டது. மும்பையைச் சேர்ந்த ‘ஓஷன் கிரேஸ் ஷிப்பிங் லிமிடெட்’ என்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தக் கப்பலில் தாக்குதல் நடத்தப்பட்டபோது 17 ஊழியர்கள் அதிலிருந்தனர்.

அவர்களில் ஐவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

அடுத்தடுத்து ரஷ்யாவின் மூன்று ஏவுகணைகள் அந்தக் கப்பலைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.

ரஷ்யத் தூதரிடம் இந்தியா கண்டனம்

அந்தத் தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது.

“வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதும் அப்பாவிப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கவை. அத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இந்தியாவுக்கான தற்காலிக ரஷ்யத் தூதர் விளாடிமிர் லடானோவை நேரில் அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தெரிவித்தது.

வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவரிடம் கூறியதுடன், இது குறித்த இந்தியாவின் ஆழ்ந்த கவலையை ரஷ்ய அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாதாக்குதல்மரணம்