புதுடெல்லி: எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்திய அரசு அவசரகால நடவடிக்கையாக அடுத்த 60 நாள்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க உள்ளது.
21 மாநிலங்கள் யூனியன் பிரசேதங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் வீடுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.
மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மத்திய அரசு பெட்ரோலியப் பாதுகாப்பு, உரிம விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகம்: பெட்ரோலிய பாதுகாப்பு விதிமுறைகள்
60 நாள்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும்வரை, பெட்ரோல் நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் இயக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் அதிகபட்சமாக 2,500 லிட்டர், மாநில அரசுகளால் தேர்வு செய்யும் மாவட்டத்திற்கு 2 பெட்ரோல் நிலையங்களில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமிப்புக்கு அனுமதிக்கப்படும்.
மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட விற்பனை நிலையங்களுக்கே விநியோகம் அனுமதிக்கப்படும்.
மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பொதுவிநியோக திட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.
வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே அனுமதி
எனினும், சமையல், விளக்கு ஏற்றுதல் போன்ற வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பு, பெட்ரோலில் கலப்படம் போன்ற காரணங்களால் 2014ல் டெல்லி ‘மண்ணெண்ணெய் இல்லாத நகரமாக’ அறிவிக்கப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.
தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கவும், தடையற்ற சமையல் எரிபொருளை உறுதி செய்யவும் தற்காலிகமாக மீண்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

