பிலிபிட் (இந்தியா): இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறைத் தடுப்பு ஒன்றைத் தாக்கியதாகச் சந்தேகிப்படும் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் மூவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் குர்தாஸ்புர் மாவட்டத்தில் அந்த மூவர் காவல்துறைத் தடுப்பைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்கள், உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர் என்று இந்தியா டுடே போன்ற ஊடகங்கள் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர்கள் குர்விந்தர் சிங், விரேந்தர சிங், ஜசன்பிரீட் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் சிறப்பு ராணுவப் படையைச் (Khalistan Commando Force) சேர்ந்த அவர்கள் பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த காவல் படைகள் இணைந்து மேற்கொண்ட முறியடிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
இரு ஏகே-47 துப்பாக்கிகள், இரு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்கள் மூவர் புரன்பூர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருப்பதாக பஞ்சாப் காவல்துறைக் குழு ஒன்று தகவல் தெரிவித்தது என்று பிலிபிட் காவல்துறை சொன்னது. அதனைத் தொடர்ந்து கூட்டு முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் சந்தேக நபர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.
“தங்களுக்கு மிரட்டல் விடுத்த காவல்துறையினரை நோக்கி சந்தேக நபர்கள் சுட்டதால் பதிலுக்கு அவர்களைச் சுட வேண்டியிருந்தது. அதில் அவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கூட்டு முறியடிப்பு நடவடிக்கையை பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மேற்கொண்டனர்,” என்று பிலிபிட் காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

