2006ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுமி, இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் கோகல்புரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது இப்போது 32.
"சீமாபுரி காவல் நிலையத்தைச் சேர்ந்த குழுவினர், ரகசியத் தகவல்களைக் கொண்டு, 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மே 22ஆம் தேதி கண்டுபிடித்தனர்," என்று காவல்துறை துணை ஆணையர் ஷஹ்தரா ரோஹித் மீனா கூறினார்.
2006ஆம் ஆண்டில் டெல்லியின் கோகல்புரி காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் பெற்றோர் புகார் செய்திருந்ததால், ஐபிசி 363 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள செர்டிஹ் என்ற கிராமத்தில், தீபக் என்பவருடன் தாம் வசித்துவந்ததாக அந்தப் பெண் விசாரணையின்போது தெரிவித்தார். சில பிரச்சினைகளுக்குப் பிறகு, அவர் தீபக்கை விட்டுச்சென்று, வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கியதாக காவல்துறையினர் கூறினர்.
இந்த ஆண்டின் நிலவரப்படி, கடத்தப்பட்ட 116 குழந்தைகளும் பெரியவர்களும் காணாமல்போன 301 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக ஷஹ்தரா ரோஹித் மீனா கூறினார்.

