கோயிலில் இருந்த மன்னர் சிலைகளைக் காணவில்லை: ஆய்வாளர் புகார்

1 mins read
63699556-48cd-4bba-a05b-5a4a73ab9629
புதுச்சேரியில் இருக்கும் பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் உள்ள ஆவணங்களிலிருந்து நகல் எடுக்கப்பட்ட பழைமையான மன்னர் சிலைகளின் புகைப்படத்துடன் ஆய்வாளர் செங்குட்டுவன். - படம்: ஊடகம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் உள்ள நெய்வனை கிராமத்தில் பழைமைவாய்ந்த சொர்ணகடேஸ்வரர் சிவாலயம் உள்ளது.

அக்கோயிலுக்கு எதிரே இருந்த 900 ஆண்டுகள் பழைமையான மன்னர் சிலைகளைக் காணவில்லை என விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆட்சிசெய்த ராஜேந்திர சோழசேதிராயர், விக்கிரம சோழசேதிராயர் ஆகிய இரு மன்னர்களும் நிறைய பொருள்களைத் தானமாக அளித்துள்ளனர்.

அவர்களின் உருவச் சிலைகள் நெய்வனை கோவிலுக்கு எதிரே இருந்ததாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஜூலை 30ஆம் தேதி அக்கோயிலுக்குச் சென்று, ஆய்வுக்காக மன்னர்களின் சிலைகளைத் தேடினேன். ஆனால், சிலைகள் அங்கில்லை. இது குறித்து விசாரித்தபோது, இரு சிலைகளையும் 20 ஆண்டுகளுக்கு முன் யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்,” எனத் தமது புகாரில் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “900 ஆண்டுகள் பழமையானவை என்பதால் அவை கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுதுள்ளது. எனவே, மாயமான சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்