பெட்டாலிங் ஜெயா: இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தியப் பயணிகள் அவதியுற்றனர்.
இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்குச் செல்ல வேண்டிய விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் அந்தப் பயணத்துக்குத் தயாரானவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் பலர் தங்களது பயணச்சீட்டை அவசர அவசரமாக புதுடெல்லி செல்லும் விமானத்திற்கு மாற்றினர்.
அதற்காக அவர்கள் கூடுதலாகச் செலவிட் வேண்டி இருந்தது.
மேலும், பயணத்தை ரத்து செய்த விமான நிறுவனம் தங்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பயணிகள் குறைகூறினர்.
அவர்களில் ஒருவரான துஷார் தாமன் என்னும் 18 வயது மாணவர், விமான நிலையம் வந்து சேர்ந்த பின்னர்தான் விமானம் ரத்து செய்யப்பட்ட விவரம் தமது குழுவுக்குத் தெரிய வந்தததாகக் கூறினார்.
உடனடியாக பயணத்தை வேறு விமான நிலையத்திற்கு மாற்றுமாறு அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும் சொன்னார் முதல் முறை மலேசியா வந்திருந்த துஷார்.
“நான் ஒரு மாணவன். ஒருவார சுற்றுப் பயணத்தில் மலேசியா வந்தேன். பயணத்தை வேறு நகருக்கு மாற்றுவதற்கான கட்டணம் செலுத்த என்னிடம் பணமில்லை. அதனால், நண்பர் ஒருவரிடம் கடன்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது,” என்றார் அவர்.
எங்கள் குழுவில் 12 பேர் உள்ளோம். அனைவரும் உதவி இன்றி தவிக்கிறோம். பயணச் சீட்டில் மாற்றம் செய்ய நாங்கள் ஒவ்வொருவரும் 1,000 ரிங்கிட் (S$304) தரவேண்டி இருந்தது,” என்று புதன்கிழமை திரு துஷார் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு மாணவரான மோகித் பக்கா, 24, என்பவர் கூறுகையில், பயணச்சீட்டை மாற்றிய பின்னர் எங்கு தங்குவது என்று தெரியாமல் அலைந்து திரிந்ததாகத் தெரிவித்தார்.
கையில் பணமில்லாததால் விமான நிலையத்திலேயே இரவுப்பொழுதைக் கழிக்க முடிவெடுத்ததாக அவர்.
புதுடெல்லியில் இறங்கினாலும் தமது சொந்த மாநிலமான பஞ்சாப்புக்கு பத்திரமாகச் சென்று சேருவது பற்றி எந்த உறுதியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.