இந்திய இளையர்கள் வேலை செய்ய விரும்பும் இரு நகரங்கள்

இந்திய இளையர்கள் வேலை செய்ய விரும்பும் இரு நகரங்கள்

1 mins read
c7377764-7798-42be-97d2-70aeaea595f3
இளம்பெண்களில் பலரும் கொச்சி நகரையே தங்களுக்கு விருப்பமான வேலையிடமாகத் தெரிவுசெய்துள்ளனர். - படம்: கேரளச் சுற்றுலாத்துறை

புதுடெல்லி: இந்திய இளையர்களில் அதிகமானோர் தாங்கள் வேலை செய்ய விரும்பும் நகரங்களாக கேரள மாநிலத்தின் கொச்சியையும் திருவனந்தபுரத்தையும் தெரிவுசெய்துள்ளனர்.

‘இந்தியா தேர்ச்சித்திறன் அறிக்கை 2024’ இதனைத் தெரிவித்துள்ளது.

அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம் (ஏஐசிடிஇ), இந்தியத் தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம், கூகல், டேக்டு ஆகியவற்றுடன் இணைந்து, ‘வீபாக்ஸ்’ எனும் திறன் மதிப்பீட்டு முகவை இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அத்துடன், 18-21 வயதுப் பிரிவில் மிகுந்த வேலைத்தகுதி வளங்களைக் கொண்டுள்ள இரண்டாவது மாநிலம் எனும் பெருமையையும் கேரளம் பெற்றுள்ளது.

தேசிய வேலைத்தகுதித் தேர்வில் பங்கேற்ற 388,000 இளையர்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைத்தகுதி மேம்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. ஆய்வில் பங்கேற்ற இளையரில் 51.25 விழுக்காட்டினர் போதிய தேர்ச்சிகளுடன் வேலைக்குத் தகுதியானவர்களாக உள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.

வயது வேறுபாடின்றி, ஆண், பெண் என இரு பிரிவினரும் வேலை செய்ய விரும்பும் நகரங்களின் பட்டியலில் கொச்சி இரண்டாமிடத்தையும் திருவனந்தபுரம் நான்காமிடத்தையும் பிடித்துள்ளன. அதே வேளையில், பெண்களில் அதிகமானோர் தாங்கள் வேலை செய்ய விரும்பும் இடமாகக் கொச்சியைத் தெரிவுசெய்துள்ளனர். 18-21 வயதுப் பிரிவில் திருவனந்தபுரம் மூன்றாமிடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்