கோல்கத்தா பெண் மருத்துவர் கொலை: பயிற்சி மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை

கோல்கத்தா பெண் மருத்துவர் கொலை: பயிற்சி மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை

2 mins read
73f6fdf3-d583-4d3f-9e38-160a02f98cf1
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. - படம்: இபிஏ

கோல்கத்தா: மேற்குவங்கத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்னும் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சஞ்சய் ராயின் ‘சிபிஐ’ காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கோல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார்.

அப்போது சஞ்சய் ராயின் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரித்த நீதிமன்றம், சஞ்சய் ராயை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

சந்தீப் கோஸிடம் கடும் விசாரணை

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஸிடம் சிபிஐ அதிகாரிகள் இதுவரை 88 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அவரது பதில்கள் திருப்திகரமாக இல்லை. எனவே அவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிதி முறைகேடு தொடர்பான வழக்கையும் சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இரவில் அவரோடு 4 பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருந்து உள்ளனர். அவர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கும் விசாரணை நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கொலை நடந்த நாள் அன்று மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் நுழைந்துள்ளார். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர் வெளியே சென்றுள்ளார். பெண் மருத்துவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

சஞ்சய் ராய் மிக நீண்ட காலமாக பெண் மருத்துவரை வேவு பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சந்தீப் கோஸ், ஆரம்பம் முதலே கொலையை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்