கோல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

1 mins read
5e04758a-b00f-4abd-8871-1df1b219c322
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாகத் தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் உட்பட 10 கோரிக்கைகளை பயிற்சி மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர்.  - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: தங்கள் கோரிக்கைகளை அரசு முழுமையாக நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கோல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கோல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு மற்ற பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பயிற்சி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதேசமயம், 24 மணி நேரத்துக்குள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், சாகும்வரையில் உண்ணாரவிதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அவர்கள் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை சனிக்கிழமைத் தொடங்கியுள்ளனர்.

கோல்கத்தா நகரில் எஸ்பிளனேட் பகுதியில் பயிற்சி மருத்துவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும்போதிலும் அவர்கள் தங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், அதற்கான பிரதிநிதிகளை முறையாகத் தேர்வு செய்தல், பணிக்குழு அமைத்தல் உட்பட 10 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அரசு தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வரையில் தங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்