கோல்கத்தா: பெண் மருத்துவர் ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்ற வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த அந்த 34 வயது மருத்துவரின் உடல் 2024 ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் தொடர்பில் நீதிகேட்டும் பொது மருத்துவமனைகளில் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரியும் அம்மாநில மருத்துவர்கள் பல வாரங்களாகப் போராடினர்.
அவ்வழக்கில் கைதான சஞ்சய் ராய் என்ற ஆடவரே குற்றவாளி எனக் கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 18) நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது. ஆனால், இது ‘அரிதினும் அரிதான வழக்கன்று’ எனக் கூறி, மரண தண்டனை விதிக்க மறுத்த நீதிபதி, வாழ்நாளின் இறுதிவரை சிறையில் கழிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு மேற்கு வங்க மாநில அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
ஆனால், நீதிமன்றத்திலிருந்த அம்மாணவியின் பெற்றோர், “தங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதியே வேண்டும்,” எனத் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், சட்டப்படி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் அதனை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறிவிட்டார்.
முன்னதாக, தண்டனை விதிக்கப்படுவதற்கு முந்திய இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது, “நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. ஏராளமான சான்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. நான் குற்றம் செய்திருந்தால் நான் அணிந்திருந்த ருத்திராட்ச மாலை உடைந்திருக்கும். நான் சிக்க வைக்கப்பட்டேனா இல்லையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்,” என்று சஞ்சய் ராய் கூறினார்.
ஆனால், தமது முன்னால் வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அவனுக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி விளக்கினார்.
தண்டனைத் தீர்ப்பையொட்டி காவல்துறையினர் 500 பேரைக் கொண்டு, சியால்தா நீதிமன்றத்தில் மூவடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“மாநில அரசு விசாரித்த வழக்குகளில் மரண தண்டனையை உறுதிசெய்துள்ளோம். இவ்வழக்கு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, சிபிஐவசம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.