கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவின் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன அங்குள்ள மஞ்சள் நிற டாக்சிகள்.
எனினும், அண்மைக் காலமாக இவற்றின் எண்ணிக்கை விரைந்து குறைந்து வருகிறது. நிலைமையைக் கையாள, மேற்கு வங்கத்தில் புதிதாக 20 மஞ்சள் நிற டாக்சிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மாறுபட்ட நவீன வடிவில் அமைந்துள்ளன இந்தப் புதிய மஞ்சள் நிற டாக்சிகள். அம்மாநில அரசாங்கம், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இந்த ‘ஹேட்ச்பேக்’ (hatchback) ரக டாக்சிகளை மேற்கு வங்கப் போக்குவரத்து அமைச்சர் ஸ்னேகசிஸ் சக்கிரபர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்டார். போக்குவரத்துச் செயலாளர் செளமித்ரா மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘மரபை வெளிப்படுத்தும் மஞ்சள் நிற டாக்சிகள்’ (Yellow Heritage Cabs) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்சிகள், பலரிடையே பழைய நினைவுகளை மலரச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருக்கை வார், விபத்து நேர்ந்தால் காரில் உள்ளவர்களைப் பாதுகாக்கும் காற்றடைப்புப் பைகள் (airbags) போன்ற நவீன கார்களில் காணப்படும் அம்சங்கள் புதிய மஞ்சள் நிற டாக்சிகளில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

