கொச்சி: விமான நிலையத்தின் வரியில்லாக் கடையில் பொருள் வாங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நிகழ்ந்தது.
கோட்டயம், எட்டுமனூரைச் சேர்ந்த ஜிம்மி சைமன் வெட்டுக்காட்டில் என்ற அந்த 63 வயது ஆடவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் எனக் கூறப்பட்டது.
தம்முடைய தாயாரைக் காண்பதற்காக எமிரேட்ஸ் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை திரு ஜிம்மி கொச்சி சென்றடைந்தார். அங்குள்ள கடையில் பொருள் வாங்கிக்கொண்டிருந்தபோது அவர் மயங்கி விழுந்து மாண்டார்.
உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
கடந்த 36 ஆண்டுகளாகத் திரு ஜிம்மி அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

