தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுவாயுதக் கொள்கைகளில் மாற்றம்: ரஷ்யா

2 mins read
88caec29-15a6-4833-b91f-ab405c6ef826
ரஷ்யா மீது அணுவாயுத ரீதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் ரஷ்யா அதன் அணுவாயுதக் கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளதாகக் கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: அணுவாயுதம் குறித்த கொள்கைகளில் ரஷ்யா மாற்றங்கள் செய்துள்ளதாகவும், தேவையேற்படின் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில், அமெரிக்காவின் பைடன் நிர்வாகம், தான் வழங்கியுள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவத் தளங்களைத் தாக்குவதற்கு உக்ரேனுக்கு அனுமதி அளிப்பதாக அறிவித்திருந்தது. அதையடுத்து, ரஷ்யா இப்போது அணுவாயுதம் பற்றிப் பேசியுள்ளது.

அணுவாயுதக் கொள்கைகளில் ஏற்கெனவே மாற்றம் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அவற்றை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்ய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பொறுப்பற்ற முறையில், அமெரிக்காவின் தொலைதூரம் பாயக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் செலுத்துவதற்கு உக்ரேனுக்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு மாஸ்கோ தகுந்த பதிலடி தரும் என்று திங்கட்கிழமை ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக உக்ரேன் மீது ரஷ்யா முழு மூச்சாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. உக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.

உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுகின்றன என்று ரஷ்யா பலமுறை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், அதிரடியாக அணுவாயுதம் குறித்துப் பேசியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்குமான இந்தப் போரில், உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் நேட்டோ நாடுகளும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் நேரடியாகக் களத்தில் உள்ளதாகவே பொருள்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு அனுமதி கேட்ட சில மாதங்களில் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யா, தனது படைகளுடன் வடகொரியப் படைகளையும் களமிறக்கியது.

அதற்குப் பதிலடி தரும் வகையில்தான் அமெரிக்கா, தனது ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய ராணுவ இலக்குகளைத் தாக்க அனுமதித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உக்ரேனுடனான போரை ரஷ்யா, சிறப்புப் போர் என்று கூறி வருகிறது. ஆனால் உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் அமெரிக்காவும் இந்தப் போரை ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று குற்றம் சாட்டி வருகின்றன.

அமெரிக்காவில் இம்மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ரஷ்ய அதிபர் புட்டின், தனது நாட்டு அணுவாயுதக் கோட்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்