சென்னை: தமிழகத்தின் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவம் கொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்தப் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
புவிசார் குறியீட்டைப் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார நோக்கத்திற்காக போலியாக வேறு யாராவது இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்முறையாக, விவசாயப் பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, திருநெல்வேலி, வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கும் புவிசார் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் அதிகமான பொருள்கள் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.