பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவின்போது, குறிப்பிட்ட சில நாள்களில் புனித நீராடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தை மாதத்தில் வரும் அமாவாசையை, மவுனி அமாவாசை எனக் குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய தினம் புனித நீராடுவதற்காக மகா கும்பமேளா நடக்கும் பகுதியில் நூறு மில்லியன் பக்தர்கள் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
‘அம்ரித் கால ஸ்னாநம்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் புனித நீராடல், முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
“ஏனெனில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘திரிவேணி யோகம்’ என்ற வானியல் தினமான இன்றுதான் (ஜனவரி 29) நிகழும். இன்று புனித நீராடுவதன் மூலம் ஒருவர் பெறக்கூடிய புண்ணியப் பலனானது மகத்தானது,” என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.
இந்நிலையில், புனித நீராட வந்த பக்தர்களுக்கு நேர்ந்த கதி, இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, புனித நீராடல் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
எனினும், நீராடல் நிகழ்வு ரத்தானது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
மேலும், அங்கு சாந்தி பூசை நடத்தப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திரிவேணி சங்கமத்தில் நீராட பக்தர்கள் ஒரே சமயத்தில் முண்டியடிக்க வேண்டாம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புனித நீராடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள காட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் உள்ள முப்பது பாலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தை அமாவாசை முன்னிட்டு, கும்பமேளாவில் இன்று காலை லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று மட்டும் ஏறக்குறைய நான்கு கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட துயரச்சம்பவத்தை அடுத்து, நீராடுவோர் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்பட்டது. எனினும், கூட்டம் குறையவில்லை.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, 17.6 மில்லியன் (1.76 கோடி) பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர் என்றும் மகா கும்பமேளா தொடங்கியது முதல், ஜனவரி 28ஆம் தேதி வரை 190 மில்லியன் (19 கோடி) பேர் புனித நீராடியுள்ளனர் என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.