தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கும்பமேளா துயரம்: ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை விசாரித்த மோடி

2 mins read
6585b679-d632-4d18-b466-f2963035a774
பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - படம்: ஊடகம்

பிரக்யாராஜ்: மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என அவர் உறுதி அளித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

ஒரு மணி நேரத்தில் முதல்வர் யோகியுடன் பிரதமர் மோடி இரண்டு முறை பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

பிரதமர் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு வதந்திகள் கிளம்புவதைச் சுட்டிக்காட்டி உள்ள முதல்வர், ஆதித்யநாத் பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அதிக கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

40 பேர் படுகாயம்

முன்னதாக, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்த நிலையில், அவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

புனித நீராடல் ரத்து

மகா கும்பமேளாவின்போது தை அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், அமாவாசையன்று பலர் உயிரிழந்துவிட்ட சம்பவம் பிரயாக்ராஜில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் புனித நீராடல் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு மகா கும்பமேளாவில் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 12 (மாசி பௌர்ணமி),பிப்ரவரி 26 (மகா சிவராத்திரி) ஆகிய நாள்களில் புனித நீராடல் மேற்கொள்வது புண்ணியம் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்