லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர்.
நாளையுடன் (பிப்ரவரி 26) திருவிழா நிறைவடைகிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி ‘அமிர்த’ குளியலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், உத்தரப் பிரதேச அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மகா கும்பமேளா துவங்கியதிலிருந்து இதுவரை ஜனவரி 13, 14, 29, பிப்ரவரி 3, 12 ஆகி தேதிகளில் மொத்தம் ஐந்து முறை இத்தகைய சிறப்பு குளியல்கள் நடந்துள்ளன
பிரயாக்ராஜுக்குச் செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகள், வழித்தடங்களில் மோட்டார் சைக்கிள்களில் 40 காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீரான, பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாற்றுப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரயாக்ராஜை இணைக்கும் ஏழு சாலை வழித்தடங்களில் கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.
கும்பமேளாவின் கடைசி நாள், மகாசிவராத்திரியுடன் இணைந்து வருவதால், நகரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஏற்கெனவே கூடுதல் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியில் கின்னஸ் சாதனை
பிரயாக்ராஜ் நகரில் தூய்மைப் பணியை மேற்கொள்ள 15,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இது கின்னஸ் சாதனை முயற்சி எனவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதன் முடிவு வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கைகளில் கியூஆர் கோடு கொண்ட பட்டையைக் கட்டியுள்ளதாகவும் தூய்மைப் பணிகளைத் தணிக்கை குழுவினர் கண்காணிப்பார்கள் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியதிலிருந்து கங்கை, யமுனை கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் இதுவரை கிட்டத்தட்ட 64 கோடி பேர் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்தது.