புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி நிதிநுட்ப நிறுவனமாக ‘கிரெட்’ உள்ளது. அதன் நிறுவனர் குணால் ஷா, ‘வாட்ஸ்அப்’ செயலியின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்தை வழிநடத்தி வந்த வில் கேத்கார்ட்டுக்குப் பதிலாக குணால் ஷா இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
‘வாட்ஸ்அப்’பின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குணால் ஷாவின் இந்த உலகளாவிய நியமனத்தின் ஒரு பகுதியாக, மெட்டா நிறுவனம் கிரெட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 900 மில்லியன் டாலர் (ரூ.8,550 கோடி) முதலீடு செய்யவுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் மெட்டா நிறுவனம் ‘கிரெட்’ன் சிறுநிலை பங்குதாரராக இணைகிறது.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, குணால் ஷா கிரெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார்.
அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் நிதித்துறைத் தலைவராக இருக்கும் மிதென் சம்பத் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
குணால் ஷா கிரெட் நிறுவனத்தின் தனிப்பட்ட பங்குகளையும், முக்கியப் பங்குதாரர் என்ற தகுதியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார்.
இந்த நியமனம் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக கிரெட்டை குணால் ஷா கட்டியெழுப்பியுள்ளார்.
“உலகின் மிகப்பெரிய செய்திப் பரிமாற்றச் செயலியான ‘வாட்ஸ்அப்’ஐ வழிநடத்துவதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும், உழைப்பும் அவரிடம் உள்ளன,” என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்துப் பேசிய குணால் ஷா, ‘வாட்ஸ்அப்’ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
மேலும், மெட்டா நிறுவனத்தின் இந்த முதலீடு ஒரு நிதி முதலீடே தவிர, இதனால் கிரெட் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும், வாட்ஸ்அப் நிர்வாகத்திற்குப் பயனர்களின் தரவுகளை அணுகும் அதிகாரம் வழங்கப்படாது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

