புதுடெல்லி: லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ஹனிஃபா டெல்லி காவல்துறையினரால் அக்டோபர் 1ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 30ஆம் தேதியன்று பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உட்பட நூற்றுக்கணக்கானோர் டெல்லி -ஹரியானா எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து லடாக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
திரு வாங்சுக் உட்பட மற்ற அனைவரையும் அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருப்பதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
லடாக் பகுதிக்கு அரசமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திரு வாங்சுக் உட்பட நூற்றுக்கணக்கானோர் லடாக் தலைநகர் லேயிலிருந்து புதுடெல்லிக்குப் பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணி செப்டம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கியது.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மலைப்பகுதி, கரடுமுரடான பாதைகளை அமைதியான முறையில் கடந்து சென்றவர்களை அதிகாரிகள் கைது செய்த விதம் அதிர்ச்சி அளிப்பதாக லடாக்கைச் சேர்ந்த அமைப்புகள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
“லடாக்கைச் சேர்ந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்குக் கடும் வெப்பம் பழக்கமில்லாத ஒன்று. பலருக்குக் கால்களில் காயங்கள் ஏற்பட்டன. செப்டம்பர் 30ஆம் தேதியன்று அவர்கள் டெல்லியை நெருங்கியபோது கைது செய்யப்பட்டனர்.
“அவர்கள் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தரையில் படுக்கவைக்கப்பட்டனர்.,” என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினரான திரு டோர்ஜே லாருக் கூறினார்.
லடாக் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
லடாக் மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு காண 2023ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழுவுடனான பேச்சுவார்த்தையைத் தொடரும்படி இந்திய உள்துறை அமைச்சிடம் அவர் வலியுறுத்தினார்.