திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது.
இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக அறிவித்ததுடன் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசுதான் இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்து இருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய தோஷம் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து கோவில் தோஷத்தைப் போக்க சம்ரோஷணம் எனப்படும் குடமுழுக்கு நடத்தி கோவிலை தூய்மைப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கலப்பட நெய் குறித்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாசாகர், சைதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“கலப்பட நெய் விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோவிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் இந்துகளின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகவுடா எத்தனால் என்பவரும் ஜெகன்மோகன் ரெட்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பவன் கல்யாண் விரதம்
இந்த நிலையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்கப் போவதாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்தார்.
“திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்,” என்று சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளார்.
“இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகாரச் சபதம் எடுத்து, 11 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன். 11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2ஆம் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விரதத்தை ஞாயிற்றுக்கிழமை (செப் 22) தொடங்கப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

