மும்பை: தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, தனது பள்ளித் தோழரான பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து 81 வயது முதியவர் மனு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கராலி வோரா.
மகாராஷ்டிராவின் மீரா ரோடு பகுதியில் வசித்து வரும் இவர், 1989ஆம் ஆண்டு பயந்தர் கிழக்குப் பகுதியில் சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தைச் சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கினார்.
எனினும், 2011ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களால் தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வோரா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக 2015ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக வருவாய்த்துறை, காவல்நிலையங்களில் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதியன்று புதுடெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டார். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் அளித்த நேர்மறையான பதிலால் தனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அஸ்கராலி வோரா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலையீட்டை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செப்டம்பர் 16 அன்று சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

