நிலம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: தனியார் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்து முடக்கம்

நிலம் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: தனியார் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்து முடக்கம்

2 mins read
fe7bd399-c1e5-405c-ad5b-35da12928e09
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான லூதியானா, ஜெய்ப்பூரில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 37 இடங்களை ஞாயிற்றுக்கிழமை (25) அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் பல ஆயிரம் முதலீட்டாளர்களை ஏமாற்றிய மோசடி வழக்கில் பேர்ல் அக்ரோ கார்ப் லிமிடெட் (பிஏசிஎல்) நிறுவனத்தின் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான லூதியானா, ஜெய்ப்பூரில் உள்ள 37 இடங்களை ஞாயிற்றுக்கிழமை (25) அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே உள்ள ரூ.1,500 கோடி மதிப்புள்ள முக்கிய நிலம் உட்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான சொத்தின் மதிப்பு தற்போது ரூ.7,600 கோடியாகி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

பன்னடுக்கு வணிக நிறுவனமான அது, நிலம் தருவதாகக் கூறி நாடு முழுவதும் கிட்டத்தட்ட 6 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற்றது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்பட்ட அந்நிறுவனம், ஏறக்குறைய ரூ.60,000 கோடி மோசடி செய்துள்ளது.

நிறுவனத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான நிர்மல் சிங் பங்கூ என்பவர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி பிரேம் கவுர், மகள்கள், மருமகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய புலனாய்வுத் துறையும் (சிபிஐ), பஞ்சாப் காவல்துறையும் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தன. கோல்கத்தாவில் உள்ள போலி நிறுவனங்கள் மூலமாகவும், ஹவாலா முறையிலும் துபாய், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் ஓட்டல்கள், சொகுசு விடுதிகளை வாங்கி பணத்தை மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழுவிடம் சொத்து விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்