கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்குச் சொந்தமான 404 ஏக்கர் நிலம் உள்ளது. இதற்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரைச் சந்தித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் ஷோபா, வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில கும்பல்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
“கடந்த 2019ஆம் ஆண்டு வரை முனம்பம் பகுதி மக்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. கர்நாடகாவில் மட்டும் சுமார் 29,000 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து வக்பு சட்டத் திருத்த மசோதா பற்றி ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவிக்கப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.