புதுடெல்லி: நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தொழிலதிபரான ராபர்ட் வதேரா, ஹரியானாவைச் சேர்ந்த ஓம்காரேஷ்வர் என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அவரது சொந்த நிறுவனமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டியின் பெயரில் இந்த இடம் வாங்கப்பட்டது. நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.7.5 கோடியாகும்.
எனினும், இதற்காக வழங்கப்பட்ட காசோலைகள் இன்னும் பணமாக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உட்பட ஒன்பது பேர் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா விசாரித்தார். புதன்கிழமை (ஏப்ரல் 15) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராபர்ட் வதேரா உள்ளிட்ட ஒன்பது பேரும் எதிர்வரும் மே 16ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


