புதுடெல்லி: ‘சந்திரயான்-4’ திட்டத்துக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், நிலவின் தென்துருவப் பகுதியில் ‘சந்திரயான்’ தரையிறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோவின்) ‘சந்திரயான்-3’ திட்டம் பெரும் வெற்றி அடைந்தது.
இதையடுத்து, ‘சந்திரயான்-4’ திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
இம்முறை ‘சந்திரயான்-4’ நிலவில் இருந்து மண்ணை சேகரித்துக்கொண்டு பூமி திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் ‘சந்திரயான்-4’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்குரிய நிதியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் எந்தப் பகுதியில் விண்கலம் தரையிறங்கும் என்ற எதிர்பார்ப்பு விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வந்தது.
தற்போது ‘எம்எம்-4’ (மான்ஸ் மவுட்டன்) என்ற தென்துருவப் பகுதியில்தான் விண்கலம் தரையிறங்கும் என இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
முன்னதாக, விண்கலம் தரையிறங்க நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் முடிவில் ‘எம்எம்-4’ என்ற இடம் தேர்வானதாகவும் இஸ்ரோ கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மற்ற இடங்களைவிட ‘எம்எம்-4’ பகுதியில் பள்ளங்களும் பாறைகளும் குறைவாக உள்ளன.
மேலும், அங்குள்ள மற்ற சூழலும் விண்கலம் நிலை தடுமாறாமல் தரையிறங்க உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

