ஸ்ரீநகர்: விலைமதிப்பில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏப்ரல் 19ஆம் தேதி இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சாலைகள் முற்றிலும் சேதமாகின. இதில் ஐவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ராம்பன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளையும் மீட்புப்பணிகளையும் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 22) அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்றபோது மக்கள் அவரின் வாகனத்தை மறித்துத் தங்களின் துயரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “இந்த மூன்று நாட்களாக மூத்த அமைச்சர்கள் தினமும் இங்கே வந்துள்ளனர். ஏப்ரல் 21ஆம் தேதி நான் நடந்துசென்று நிலைமையை ஆய்வு செய்தேன். முடிந்த வரையில் வேகமாக மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” எனக் கூறினார்.
மேலும், மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி விரைவில் திறக்கப்படுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

