புதுடெல்லி: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறவிருப்பதை முன்னிட்டு டெல்லியில் நடந்த முறியடிப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வட்டாரக் காவல்துறையினர் 24 சட்டவிரோத ஆயுதங்கள், லட்சக் கணக்கில் ரொக்கம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள்கள், திருடப்பட்ட பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். ‘ஆப்பரேஷன் ஆகட் 3.0’ திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையில் இப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொண்டாட்ட காலத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்க இந்த முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரச்சினை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரை அடையாளம் கண்டு தடுப்புக் காவலில் வைக்க பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ள பகுதிகளில் திட்டமிட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
குறைந்தது 285 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. ஆயுதங்கள், சூதாட்டம் உள்ளிட்டவற்றின் தொடர்பிலான சட்டங்களின்கீழ் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்தது.
மேலும், குற்றச் செயல்களின்றி புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடப்பதற்கு வகைசெய்யும் நோக்கில் 504 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களிடமிருந்து 21 சட்டவிரோத ஆயுதங்கள், 27 வாகனங்கள், 12,000க்கும் அதிகமான மதுபான போத்தல்கள், சுமார் ரூ. 250,000 ரொக்கம், ஏழு கிலோகிராம் கஞ்சா ஆகியவற்றைத் தாங்கள் பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
சொத்துகளைச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வாகனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்களை முடக்குவதிலும் இந்த முறியடிப்பு நடவடிக்கை கவனம் செலுத்தியது. 231 இரு சக்கர வாகனங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் முறியடிப்பு நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.
சூதாட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ரூ. 230,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட அல்லது காணாமற்போன சுமார் 210 கைப்பேசிகளும் மீட்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கைது செய்யப்பட்டவர்கள் வழக்கமாகக் குற்றச் செயல்கள், அடாவடிச் செயல்களில் ஈடுவோர் என்று டெல்லி காவல்துறை இணை ஆணையாளர் திரு ஜெயின் கூறினார்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, கூட்டாகச் செயல்படும் குற்றவாளிகளையும் வழக்கமான குற்றவாளிகளையும் கைது செய்வதே என்று திரு ஜெயின் கூறினார்.

