30 ஆண்டுகளில் காணாத ஆகப்பெரிய கனடிய வர்த்தகக் குழு இந்தியா வருகை

30 ஆண்டுகளில் காணாத ஆகப்பெரிய கனடிய வர்த்தகக் குழு இந்தியா வருகை

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2026 - 5:31 pm

2 mins read

புதுடெல்லி: பொருளியல் உறவுகளை வலுப்படுத்தவும் விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லவும் கனடாவின் ஆகப்பெரிய வர்த்தகக் குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இருக்கும் வாய்ப்புகளை முன்னூறுக்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி விவாதிக்க உள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாவின் ஆகப்பெரிய வர்த்தகக் குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

விண்வெளி, தூய எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்-உணவு மற்றும் வனத்துறை ஆகியவற்றில் தமது நாட்டு வர்த்தகக் குழு கவனம் செலுத்தும் என்று கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மணிந்தர் சித்து தெரிவித்தார்.

இந்தியாவில் விரிவடைந்து வரும் சந்தை வாய்ப்புகளுடன் கனடிய வர்த்தகங்களை இணைப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் இந்தியப் பிரிதிநிதிகளுடன் விவாதிக்கப்படும் என்றார் அவர்.

இதுகுறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு சித்து, புதிய பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதிலும் கனடிய ஊழியர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமது குழு குறிக்கோள் கொண்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆண்டிறுதிக்குள் இறுதிசெய்ய இரு நாடுகளும் இலக்கு கொண்டுள்ளதாகவும் திரு சித்து தெரிவித்துள்ளார்.

இருதரப்பு வர்த்தகத்தை தற்போதைய US$30 பில்லியனிலிருந்து 2030ஆம் ஆண்டிற்குள் US$70 பில்லியனாக இரட்டிப்பாக்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது.

கனடிய அரசின் தரவுகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2025ஆம் ஆண்டில் US$30.4 பில்லியனை எட்டியது. அதில் சரக்கு வர்த்தகம் மட்டும் US$11 பில்லியன் ஆகும்.

உற்பத்தி, தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம் ஆகிய துறைகளில் வர்த்தக ரீதியான ஈடுபாட்டை விரிவுபடுத்தவும் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும் இரு நாடுகளும் முயன்று வரும் நிலையில் கனடியக் குழுவின் வர்த்தகப் பயணம் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கனடாவர்த்தகம்இருதரப்பு உறவு