இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 6ஆம் தேதிக்குள் போராட்டக்காரர்கள் சரணடைய வேண்டும் என்றும் இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவர்கள் இடையே மோதல் வெடித்ததை அடுத்து கலவரம் மூண்டது. அதன் பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றதும் பதற்றத்தை அதிகரித்தது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர் அஜய் குமார் பல்லா, இதற்காக பிப்ரவரி 20ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார்.
இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர், போராட்டக்குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து, சரண் அடையும் காலத்தை மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இது தொடர்பாக மணிப்பூர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சரண் அடைய முன் வருபவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் மார்ச் 6ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அவர்கள் சரண் அடையவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சரணடைவோர் மீது தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
“அமைதி, சமூக நல்லிணக்கம், நமது இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பங்களிக்க சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுவே கடைசி வாய்ப்பு,” என்று ஆளுநர் அஜய் குமார் பல்லா மேலும் கூறியுள்ளார்.
மணிப்பூரில் கலவரத்துடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்களில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி அம்மாநிலத்தில் அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

