விசாகப்பட்டினம்: இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தளவாட விநியோகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பல முக்கியத் திட்டங்களை மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தொடங்கி வைத்தார்.
இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே தனித்துவமாக உருவாக்கப்படும் முதலாவது கடற்படை ஆதரவுக்கப்பல் 1இன் (fleet support ship-1) கட்டுமானப் பணியையும், அந்தத் தொடரின் 5வது கப்பலான கடற்படை ஆதரவுக் கப்பல்கள் 5க்கான அடித்தளக் கட்டமைப்பு பணியும் தொடங்கப்பட்டன.
அவற்றுடன், கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ‘ஸ்லிப்வே-4’, 300 டன் எடையைக் கையாளும் திறன் கொண்ட பிரம்மாண்ட ‘கோலியத் கிரேன்’ உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப வசதிகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அந்தப் புதிய உள்கட்டமைப்பு வசதிகளின் மூலம், எதிர்காலத்தில் 45,000 டன் வரையிலான பெரிய, சிக்கலான போர்க்கப்பல்களை ஹிந்துஸ்தான் கப்பல் தளத்தில் எளிதாகக் கட்ட முடியும்.
இந்தியக் கடற்படைக்காகத் தயாராகும் இந்த ஐந்து ஆதரவுக் கப்பல்களும் தலா 43,500 டன் எடை கொண்டவை. நடுக்கடலில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்க்கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள், உணவுப்பொருள்கள், ஆயுதங்களை உடனுக்குடன் வழங்கி, கடற்படையின் செயல்பாட்டு எல்லையை நீட்டிக்கும் திறன் கொண்டவையாக அவை உருவாக்கப்படுகின்றன.
